×

கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை இன்று நிறைவு: வியாபாரிகள் வராததால் 10 டன் பூக்கள் தேக்கம்


அண்ணாநகர்: பொங்கல் பண்டிகை முன்னிட்டு, அங்காடி நிர்வாகம் சார்பில் கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 11ம் தேதியில் இருந்து இன்றுவரை சிறப்பு சந்தை நடைபெற்றது. இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து விற்பனை அமோகமாக நடைபெற்றது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். சிறப்பு சந்தைக்கு விழுப்புரம், மதுரை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்துக்கள் வாகனங்களில் அதிகமாக வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘’பொங்கல் பண்டிகை முன்னிட்டு அங்காடி நிர்வாக சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு சந்தை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

போக்குவரத்து நெரிசல் இல்லாமல் அனைத்து வாகனங்களும் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது. இன்று மாலை சிறப்பு சந்தை முடிந்துவிடும் என்றும் சிறப்பு சந்தையில் கடந்த 7 நாட்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு அனைத்து சலுகைகளும் அங்காடி நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்டது. வியாபாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அங்காடி நிர்வாக குழு மற்றும் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம்’ என்றனர்.

பூக்கள் விலை சரிந்தது
கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் அன்று அனைத்து பூக்களின் விலை அதிகரித்தது. ஒரு கிலோ மல்லி 3,700க்கும் ஐஸ் மல்லி 3,000க்கும் முல்லை 1,800க்கும் ஜாதிமல்லி 1,500க்கும் காட்டுமல்லி 2, 500க்கும் கனகாம்பரம் 1,200க்கும் சாமந்தி, பன்னீர்ரோஸ் 120க்கும் சம்பங்கி 140க்கும் சாக்லேட் ரோஸ் 160க்கும் அரளி பூ 300க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று காணும் பொங்கல் முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சரிந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 2,300க்கும் ஐஸ் மல்லி 2,000க்கும் காட்டுமல்லி, முல்லை 1,000க்கும் கனகாம்பரம் 700க்கும் ஜாதிமல்லி 600க்கும் சாமந்தி 60க்கும் சம்பங்கி 40க்கும் அரளிபூ 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் காணும் பொங்கல் முன்னிட்டு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வராததால் சுமார் 10 டன் பூக்கள் தேக்கம் அடைந்துள்ளது.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை இன்று நிறைவு: வியாபாரிகள் வராததால் 10 டன் பூக்கள் தேக்கம் appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Pongal festival ,Dinakaran ,
× RELATED வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த...